top of page

நான் ஒரு பெண்ணே அல்லவா?

  • Writer: தமிழ்க்கிழவி
    தமிழ்க்கிழவி
  • May 25, 2020
  • 1 min read

Updated: May 30, 2023


ree

PC: National park Service, U.S.



அங்குள்ள அந்த ஆண்மகன் கூறுவார்:

ஒரு பெண்ணுக்கு வண்டிகளுள் ஏறுவதற்கும்

பள்ளங்கள் வரும்போதெல்லாம் தூக்குவதற்கும்

உதவி தேவை,

எல்லா இடங்களிலும் சிறந்த இடம் அளிக்கப்படல்

வேண்டும் என்று.

எவரும் வண்டிகளுள் ஏறுவதற்கோ

அல்லது சேற்றுக் குட்டைகளைத் தாண்டுவதற்கோ

எனக்கு உதவியதுமில்லை,

ஒரு சிறந்த இடத்தை அளித்ததுமில்லை.

நான் ஒரு பெண்ணே அல்லவா?


என்னைப் பாருங்கள்...

என் கையைப் பாருங்கள்!

நான் உழுது நடவு நாட்டினேன்

விளைச்சலைக் களஞ்சியங்களில்

திரட்டவும் செய்தேன்

எந்த ஆண்மகனும்

என்னை வழிநடத்தியதில்லை...

நான் ஒரு பெண்ணே அல்லவா?


வாய்ப்புக் கிடைக்குமாயின்

என்னால் ஒரு ஆண்மகனைப் போலவே

வேலைசெய்யவும், உணவு உண்ணவும்

கசையடிகளைத் தாங்கிக் கொள்ளவும் இயலும்.

நான் ஒரு பெண்ணே அல்லவா?


நான் பதின்மூன்று குழந்தைகளைப் பெற்றேன்,

அவற்றுள் பெரும்பாலானவை அடிமைகளாய்

விற்கப்படுதலைக் கண்டேன்

பெற்றவளின் பெருந்துயரோடு

நான் கதறி அழுததை

இயேசுவைத் தவிர வேறாரும்

செவியுறவே இல்லை...

நான் ஒரு பெண்ணே அல்லவா?


அங்கு இருக்கும் கறுப்புடை அணிந்த

இளம் ஆண்மகன் கூறுவார்:

ஆணின் அளவுக்குப் பெண்ணுக்கு

உரிமை இருக்கக் கூடாதென்று


காரணம் கிறிஸ்து ஒரு பெண் அல்லர்

எங்கிருந்தையா வந்தார் உங்கள் கிறிஸ்து?

கடவுளிடமும் பெண்ணிடமும் இருந்து!

ஆண்மகனுக்கு அவருடன் எவ்வுறவுமே இல்லை!


கடவுள் படைத்த முதல் பெண் தன்னந்தனியாக

முழு உலகத்தையும் தலைகீழாக மாற்றும்

வல்லமை படைத்தவளாக இருந்தால்,

பெண்கள் அனைவரும் ஒருங்கிணைந்தால்

மீளவும் அதைத் தலைமேலாக மாற்ற முடியும்!


மூலம் (ஆங்கிலம்) : சோஜர்னர் ட்ருத் (1797-1883)

தமிழாக்கம் : குகதர்சனி றஜீவன் (தமிழ்க்கிழவி)


குறிப்பு:


சோஜர்னர் ட்ருத் சுதந்திரமாயிருந்த வெள்ளை இனப் பெண்களுக்குக் கூடச் சில உரிமைகள் மட்டுமே வழங்கப் பட்டிருந்த காலத்தில் கறுப்பின அடிமையாகப் பிறந்தவர். இந்தக் கவிதை 1852 ஆம் ஆண்டு ஓஹியோவில் நடைபெற்ற பெண்கள் உரிமைகள் மாநாட்டில் ஆற்றப்பட்ட உரையின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது.





Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Follow Me

  • Facebook
  • TikTok
  • Youtube
  • Instagram
  • Gurushots
© 2024 by Thamizhkkizhavi.
bottom of page