தமிழ்க்கிழவியின் கிறுக்கல்கள்
- தமிழ்க்கிழவி

- May 11, 2020
- 2 min read
Updated: Jun 9, 2023

கவிதைத்தொகுப்பு, பாரதிபுத்திரன் வெளியீடு, மே 2020.
வாசகர் கண்ணோட்டம் :
தமிழின் புதிய பரிணாமம் காண்கிறேன்..’நிலவு ஒளிரும் வயலினிலே’...கவிஞர் தனது 14 ஆவது அகவையில் ஆக்கம் செய்தது என்பது மிகவும் வியப்புக்குரிய விடயம். ‘கட்டுப்பெட்டியின் காதல்’. நடுத்தரக் குடும்பத்து நங்கையர் பலருடைய கண்ணீர் பூக்களாய் அக் கவிதை! ஆகுதிக்கு நெய்யாகும் அக்காக்களின் அவல ஓவியம். அத்தகைய ஈரவிழிக் காவியங்களால் இதயம் கசிந்த கவிதை !! மனதில் வசிப்பவை காலக்கவிதைகள்!! உண்மை அன்பு அடைவதும், அதனை ஆய்ந்துணர்ந்து அனுபவிப்பதை பொற்காலம் என்னும் கவிஞரின் கூற்று சிந்தனைக்கும் செயலுக்கும் உகந்ததாகும். பாச பந்தங்களும், உலக வாழ்வியலும் அடுத்தடுத்த பரம்பரைகள் அறிந்திட வாழவேண்டும் இறப்பு நேர்வதற்குள் என ஏங்கும் ஆன்மக்குரலின் எதிரொலியாய் ‘மரணம்’ எனும் கவிதை இருக்கக் காண்கிறேன். ‘காலம்’ எனும் தலைப்புச் சுமந்த கவிதையின் வினாவுக்கு காலமே தான் விடையளிக்க இயலும். வியப்பு மேலிடவைக்கும் வரிகள் அவை. வாசிப்பில் இதயம் அழுத கவிதை, ‘தம்பி! நீ வந்திடடா’ வெம்பிப் போனது மனது வேதனை துயர் நிரம்பி. தும்பி தொலைத்த வானம் போல், இன்பம் அழிந்தது இதயம். கண்ணீர் ஓவியமாய் கவிதை. வலியோடு வாழ்த்துகிறேன் சகோதரி... ‘உதிரும் என் இலையாளுக்கு....’ படித்த மனமும் உதிர்ந்து போனது., நிலையாமை எண்ணி. நிலைக்கும் தமிழ்! நீடூழி வாழ்க./ - பா.சே.ஆதவன்.
சமீப காலமாக மொழிமாற்று கவிதைகளை இவர் பக்கத்தில் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. லெபனான் கவிஞர் கலில் ஜீப்ரான் தொட்டு லெமூரீயா காலம் தொட்டு பண்டைத் தமிழ் கவிதைகளை பக்கம் பக்கமாக பதிவிடும் பெரும் தமிழ் பணியின் ஆர்வலர் தமிழ்க்கிழவி. இவரின் மின்னிதழ் தொகுப்பாக வந்துள்ள ‘தமிழ்க்கிழவியின் கிறுக்கல்கள்’ நூலின் நூற்றுப்பத்துக் கவிதைகளைப் படித்தேன். அவற்றில் சிலவற்றை இங்கு பகிர்கிறேன். படித்துப் பாருங்கள். விவசாயி ————- காய்ந்த வயிறும் தேய்ந்த செருப்பும் ‘நெய்த நூலிலும் தைத்ததே அதிகமான’ ஆடையும் வேய்ந்தும் ஒழுகும் வீட்டின் கூரையுமன்றி வேறென்ன கண்டானிவன்? * மனிதன் ———- பறவைக்குள்ள சுதந்திரங்கூட எனக்கில்லை, பரிணாம வளர்ச்சியில் நானோர் முற்பட்ட உயிரி! * அம்மா ——— வாய் பேசும் மனிதனதோ வாய் பேசாச் சீவனதோ பிள்ளைக்கு இன்னலென்றால் பதைக்குமோர் திருவுருவம். ‘ஆறுக்கெணை’ எண்டால் அஞ்சுக்கே வந்தெழுப்பி ‘ஆறாச்சு மோனை’ என்று தலை தடவும் அலாரமொன்று! * ‘கழுகதன் கதையை கேட்டால் கணமேனும் கலங்க மாட்டாய்’ உரமதை ஊட்டும் வரிகள் ஒவ்வொரு சொல்லும் உயிருக்கு துணிவை கூட்டும் நெறிகள். தமிழ்க்கிழவியின் காணொளிக் கவிதையை ( கழுகு) திரும்ப இரை மீட்டி பார்க்கிறேன். எனக்குள் பல உரை மீட்டி ஓங்கி உதைக்கிறது. அந்த கவிதைக்குள் ஓர் பாரதி இருப்பதாய் பல வழிகளில் எனக்குள் ஏதோ விதைக்கிறது. எழுத்தை விதைக்கும் படைப்பாளி விதையை விதைத்து தோப்பாக்கும் உழைப்பாளியை விட குறைந்தவனல்ல. சிறந்த படைப்பை - தமிழுக்கான நிறைந்த தொன்மை இருப்பை மழை போல் பெய்து தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்யும் இவரின் படைப்பும் வணங்குதலுக்குரியது. மேலும் தொடர்ந்து உங்கள் பணி சிறக்க கவிதைகள் சிறகடித்து பறக்க அண்ணனின் அன்பு வாழ்த்துக்கள் வாழ்க தமிழே/ - ஆனந்த சுப பாலா.


Comments