கோகிலவாணி தேவராஜா அவர்களின்‘அடையாளம்’ சிறுகதை குறித்த பார்வை
- தமிழ்க்கிழவி

- Apr 2, 2021
- 1 min read
அநாவசியமற்ற விபரணங்கள், சோடனைகள் இன்றி, இரண்டு பக்கத்திற்குள், ஓரிரு கதாபாத்திரங்களுடன், வீதித் தடைகளற்ற சாலையொன்றில் பயணிப்பது போலத் தொய்வின்றி நகர்கின்றது கதை. கதைசொல்லி இயற்கையை இரசிக்கிற இடங்களில் காட்சி அமைப்பு கண்முன் விரிகிறது. சட்டென்று அக்காட்சி மறைகையில் பெருமூச்சும் எழுகிறது. லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் கதையில் வருகிற அம்மம்மாவின் சட்டையை அணிந்திருந்த ஓநாய் போலப் பரீட்சயமான புறத்தோற்றத்தில் வருவோரால் ‘ஈர நிலத்தில் எங்கெங்கோ தோண்டி’ நடப்படுகின்ற ‘ஏதேதோ பதாகைகள்’ கதைசொல்லியின் வாழ்வில் ஏற்படுத்துகின்ற தாக்கம் வாசிப்பவர் நெஞ்சிலும் கூரான ஈட்டியாய் இறங்கக் கண்கள் வலியைப் பிரதிபலித்து வியர்க்கின்றன.
இந்த நூற்றாண்டில் எந்த இனமும் சந்தித்திராத நீண்ட போரியல் வாழ்வையும், இழப்புகளையும் சந்தித்த இனமொன்றின், போரின் பின்னரான பாடுகளையும், துன்பியலையும் ‘அடையாளம்’ சிறுகதை, கதைசொல்லியின் கண்களினுடாகப் பார்த்து, மனதைத் தொடும் விதமாகப் பதிவு செய்துள்ளது என்றால் மிகையில்லை.
தமிழ்க்கிழவியைச் செதுக்கிய சில நூறு உளியேந்திய கரங்களுள் ஒன்று, எழுதுகோல் ஏந்திப் படைத்துள்ள இச்சிறுகதையையும், இன்னும் பல படைப்பாளர்களின் படைப்புகளையும் உள்ளடக்கி, எப்போதும் போல அழகிய அட்டைப்படத்துடனும், நேர்த்தியான வடிவமைப்புடனும் சிறுகதைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இம்மாத ‘காற்றுவெளி’ மின்னிதழைப் பெற்று வாசிக்கவும், படைப்புகளைச் சமர்ப்பிக்கவும் ஆர்வமுள்ளோர் mahendran54@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.
-தமிழ்க்கிழவி.

[PC: காற்றுவெளி]

Comments