ஏற்பாடு (testament)
- தமிழ்க்கிழவி

- May 31, 2020
- 1 min read

நான் எங்காவது பறந்துவிடப் போகிறேன்.
உயரங்கள் மீதான மனப்பயம்
என்னைக் குழப்பமான கனவுகளைக் காணவும்,
அமைதிப்படுத்த வல்லோரை அடிக்கடி நாடவும் வைக்கிறது.
இறந்து விட வேண்டும் என்றால்,
என் மகள் எப்போதும் என்னை நினைவில் நிறுத்த வேண்டும்
என்றே நான் விரும்புகிறேன்.
-------- 0 ---------
விளம்பரம் :
சுதியோடு ஒத்திசைய இயலாத போதும்
ஒரு பாடலை அவளுக்காகப் பாடுவதற்கும்,
அழகுற விரிக்கப்பட்ட ஒரு படுக்கையையோ
திரமான ஒரு நேர அட்டவணையையோ காட்டிலும்
பரிசுத்தமான கனவுகளை அகமார அவளுக்கு வழங்குவதற்கும்,
அன்பையும், விடயங்களை ஆழ்ந்து உள் நோக்குகின்ற ஆற்றலையும் அவளுக்கு அளிப்பதற்கும்,
எப்படி கூட்டல் கணக்கு செய்வது?
எப்படி உருளைக் கிழங்கை உரிப்பது?
என்பவற்றுக்குப் பதிலாக
நீலச் சூரியன்களையும், சுடர் விடும் ஆகாயங்களையும் கனாக்காண அவளுக்குக் கற்றுக் கொடுப்பதற்கும்,
என் மகளை அவளது வாழ்வுக்காகத்
தயார் செய்வதற்கும்,
ஆள் தேவை!
-------- 0 ---------
நான் ஒரு விமானத்தில் இறப்பேனாயின்,
எனது உடலினின்றும் பிரிக்கப்படுவேன்
விசும்பில் சுயாதீனமாய் மிதக்கின்ற
அணுவாய் ஆவேன்.
அவளது இல்லத்தில்
எந்தக் கணக்கும் கூட்டப்படாமலும்,
உருளைக் கிழங்குகள் முழுதாய் மறக்கப்பட்டு
இன்னமும் அவற்றின் சாக்கிலேயும்
கிடப்பதைக் கண்ணுற்ற திருப்தியிலும், பெருமையின் திகைப்பிலும்,
நான் வானில் பறந்து போனேன் என்று
என் மகள் தன் நினைவில் நிறுத்தி, அதை
அவள் மகளுக்குச் சொல்லட்டும்!
மூலம் : அனா லூயிசா அமரல்
போர்த்துகீசியம்/ஆங்கிலம்: போர்த்துகீசியம்/ஆங்கிலம்:
ஆங்கிலம்/தமிழ் : குகதர்சனி றஜீவன் (தமிழ்க்கிழவி)
குறிப்பு:
1956ல் போர்த்துக்கல் லிஸ்பனில் பிறந்த அனா லூயிசா அமரல் பல கவிதை, கட்டுரை, புனைவு, சிறுவர் இலக்கிய நூல்களின் ஆசிரியர். எமிலி டிக்கின்சனின் படைப்புகள் பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றவர். இலக்கியத்துக்கான பல விருதுகளை வென்ற இவரது படைப்புகள் பத்துக்குக் கூடிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

Comments